ஸ்ரீவில்லிபுத்தூர்

<< >>

ஸ்ரீவில்லிபுத்தூர் (Srivilliputtur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில், 200 வருட சிறப்புப் பெற்ற இந்து மேல்நிலைப் பள்ளி, 137 வருட சிறப்புப் பெற்ற பென்னிங்டன் நூலகம் ஆகியவை இதற்குச் சான்று பகர்பவை. திருப்பாவை என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்த கோவில் நகரமே ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் இங்கு அமைந்துள்ள ஆண்டாள் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. ஊரின் உள்ளாட்சி நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழக அரசு சின்னம்:

தமிழ்நாடு அரசு சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இருக்கும் ஆண்டாள் கோயிலின் கோபுரம்தான் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது. ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம்கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகும். tamilnadu_logoஇந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரம் அன்று இழுக்கப்படும் அழகியதேர் ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் இன்றும் அதன் பண்டைய மரபு மற்றும் பக்தி பங்களிப்புகளால் அறியப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊர்ப்பெயர்:

இந்த ஊருக்கு இப்பெயர் வரக்காரணம் இதனை உருவாக்கிய வில்லி என்பவார். வில்லிபுத்தூர் என்று பெயரிடப்பட்ட இவ்வூர், திருமகளாகிய ஆண்டாளின் அவதாரத் தலமாக இருப்பதால் “ஸ்ரீ” என்னும் பெயர் பெற்றது. “ஸ்ரீ” என்னும் சொல் வடமொழிச் சொல்லாக இருப்பதால் “திரு” என்று வழங்கப்படுகிறது.

முக்கிய ஆலயங்கள்:

1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
2. மடவார்வளாகம் சிவன் கோயில்
3. திருவண்ணாமலை கோயில்
4. பெரிய மாரியம்மன் கோயில்
5. சந்தன மாரியம்மன் கோயில்

பிற வழிபாட்டுத் தலங்கள்:

1. சி. எஸ். ஐ தேவாலயம்
2. ரோமன் கத்தோலிக்கர் தேவாலயம்
3. தரகுமலை மாதா கோவில்
4. மசூதி

போக்குவரத்து:

ஸ்ரீவில்லிபுத்தூருக்கான ரயில் இணைப்பு, தெற்கு இரயில்வே விருதுநகர் – செங்கோட்டை பாதையில் உள்ளது. இது மதுரையில் இருந்து 74 கி.மீ. தெற்கே அமைந்து உள்ளது. மதுரை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி மற்றும் சாத்தூர் உடன் சாலை மற்றும் ரயில் இணைப்பு பெற்றுள்ளது. சென்னையில் இருந்து செங்கோட்டை வரும் செல்லும் அகல ரயில் பாதை இவ்வூரையும் கடக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் பொதிகை விரைவு வண்டி இந்த ஊர் ரயில் நிலையத்தில் நிற்கும்.

SRS Travels, Srivilliputtur.

அருகமைந்த ஊர்கள்:

ராஜபாளையம் – 11 கி. மீ
சிவகாசி – 20 கி. மீ.
மதுரை – 74 கி.மீ.
தென்காசி -79 கி.மீ.
குற்றாலம் – 85 கி.மீ.
செங்கோட்டை – 86 கி.மீ.
விருதுநகர்- 45 கி.மீ. ( சராசரியாக)

சிறப்புமிக்க இடங்கள்:

1. ஆண்டாள் திருக்கோவில்
2. பென்னிங்டன் நூலகம்
3. திருமுக்குளம்
4. செண்பகத் தோப்பு சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம்
6. திருமலை நாயக்கர் அரண்மனை
7. சதுரகிரி மலை
8. தாணிப்பாறை
9. பிளவக்கல் ஆணை

கொண்டாட்டங்கள்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழாவில் 12-ஆம் நாள், தேரோட்டம் நடைபெறும்.மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டாள் கோயிலில் வருடாந்திர கோவில் தேர் திருவிழாபார்க்க வருவர். இது விருதுநகர் மாவட்டத்தில் மிக பெரிய விழாக்களில் ஒன்றாகும். இது 108 திவ்ய தேசம் எனப்படும் வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். காலையில் சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர்,உற்சவ தெய்வங்கள், ஸ்ரீ ரங்கமன்னார் மற்றும் ஆண்டாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் மூலம்தேருக்குக் கொண்டு வரப்படுவர். பின்னர் தேர் நான்கு ரத வீதிகளில் பவனி வரும். பெரிய மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூக்குழித் திருவிழாவும் சிறப்பானது. பல்வேறு ஊரில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து தீமீதித் திருவிழாவில் கலந்து கொள்வர்.

உணவு:

தமிழகத்தின் முக்கிய உணவான அரிசி சோறு இவ்வூரின் முக்கிய உணவாக உள்ளது. இவை தவிர பிற தமிழக உணவுகளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடைக்கும். புரோட்டா என்று அழைக்கப்படும் மைதா மாவினால் செய்யப்படும் ரொட்டியும் இங்கு பிரசித்தம். பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்ததும், புரோட்டா கிடைக்கும் உணவகங்கள் இங்கு உண்டு. பதநீர் இங்கு கிடைக்கும் இனிமையான இயற்கை குளிர்பானம். பதநீர் அரசின் கூட்டுறவுக் கழகம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது.

முக்கிய தொழில்கள்:

1. நெசவுத் தொழில்
2. பால்கோவா தயாரிப்பு

இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்றது.மிகப் பிரபலமான துணி விற்பனை செய்யும் நிறுவம் போத்தீஸ் முதலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தான் துவங்கப்பட்டது. அதே போல், பால்கோவா என்ற இனிப்புத் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வெளிநாட்டில் வாழும் தமிழர்களாலும் விரும்பி உண்ணப்படும் இனிப்பு ஆகும்.

பிற தொழில்கள்:

சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் செய்பவர்கள் இருக்கிறார்கள். சிவகாசியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளிலும், ராஜபாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலைகளிலும் வேலைக்கு மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து செல்வதுண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அருகில் உள்ள பகுதிகளில் கல் குவாரி, செங்கல் சூளை முதலியவை உண்டு.

கல்வி:

ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பான கல்வி நிறுவனங்களைப் பெற்றுள்ளது. இவ்வூர் மாணவியர் அரசுத் தேர்வுகளில் மாநிலத்திலேயே சிறப்பான இடங்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

கல்வி நிறுவங்கள்:

பள்ளிகள்:
˜ தியாகராஜா மேல்நிலைப் பள்ளி
˜ ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
˜ சி.எம். எஸ். மேல்நிலைப் பள்ளி
˜ குருஞான சம்பந்தர் ஹிந்து மேல்நிலைப்பள்ளி
˜ திரு.வி.கல்யாண சுந்தரனார் முனிசிபல் உயர்நிலைப்பள்ளி
˜ மகாராஜபுரம் நாகம்மாள் ராஜையா பெண்கள் மேல்நிலைப்பள்ளி
˜ புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கான்வென்ட்)
˜ புனித இருதய நடுநிலைப் பள்ளி
˜ மங்காபுரம்இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி
˜ புனித அந்தோணியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
˜ சின்மயா வித்யாலயா
˜ காயத்ரி மெட்ரிகுலேசன் பள்ளி
˜ கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளி

கல்லூரிகள்:
˜ கலசலிங்கம் பல்கலைகழகம், கிருஷ்ணன்கோவில்.
˜ வி.பி.எம். குழுமம் கல்வி நிறுவனங்கள் , கிருஷ்ணன்கோவில்.
˜ அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

இலக்கியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர்:

பெரியாழ்வார் இயற்றிய “திருப்பல்லாண்டு”, ஆண்டாள் இயற்றிய “திருப்பாவை”, “நாச்சியார் திருமொழி” ஆகியவை தமிழுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த இலக்கியங்கள். அன்றைய நாளில் இவ்வூர் எப்படி இருந்தது என்பதற்கான குறிப்புகள் ஆண்டாளின் பாசுரங்களில் காணப்படுகின்றன.

வரலாறு:

தென்னிந்திய வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது,கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான “திரு” என்ற என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்பெற்றது.

மதுரையை ஆண்ட மன்னர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள கோவில்களின் தெய்வங்களை வழிபடுபவர்கள். மதுரை மன்னரின் தீராத வயிற்று வலியைத் தீர்த்தமையால் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் பூஜை முடிந்த மணியோசை கேட்ட பிறகு தான் உணவருந்துவாராம் மதுரை மன்னர். ஆலாட்சி மணிகளின் ஒலி கேட்பதற்காக சாலை நெடுகிலும் மணி மண்டபங்கள் / முரசு மண்டபங்கள் எழுப்பினார் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. கோவிலின் தல வரலாற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் பாதையில் சில பழைய மண்டபங்களை சிதிலமடைந்த நிலையில் இன்றும் காணலாம்.

ஆட்சியாளர்களின் காலவரிசை:

திருமலைநாயக்கர் (1623-1659) மற்றும் ராணிமங்கம்மாள் (1689-1706) ஆட்சி காலத்தில், இந்த நகரம் மிகவும் பிரபலமானது. திருமலை நாயக்கர் புனிதப் பணியாக இவ்வூரில் உள்ள கோவில்களுக்குக் கட்டுமானம், மற்றும் சீரமைப்பு பணிகளுக்குப் பொருளதவி செய்துவந்தார். 1751 முதல் 1756 கி.பி. இருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நெற்கட்டும்செவல் பாளையக்காரர் பூலித் தேவர் ஆட்சியின் கீழ் வந்து ஒரு மறவர்

பாளையமாக இருந்தது. பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைபெரியசாமி தேவர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது.[8]பின்னர் , முகமது யூசுப் கான் கைகளில் விழுந்தது. 1850 வரை, ஆண்டாள் கோவில் திருவிதாங்கூர் ராஜா சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரிட்டிஷ் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1838-இல் திருநெல்வேலி மாவட்டத்தில் இணைக்கப்பட்டு இருந்தது. 1910-இல் ராமநாதபுரத்தில் இணைக்கப்பட்டு மேற்கு ராமநாதபுரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்பு ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது முதல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமை:

அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படுகிறது. இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். லட்சுமி தாயாரே ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்ததும் இத்தலத்தில்தான். அதுமட்டுமின்றி இவ்விருவருமே ஆழ்வார்களில் ஒருவராக இடம்பிடித்தவர்கள். இவ்வூரை, “கோதை பிறந்த ஊர்’, “கோவிந்தன் வாழும் ஊர்’ என்றும் சிறப்பித்து சொல்வர். பங்குனி உத்திரத்தில் திருமணம்:ஆண்டாளை, ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக அவளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். அவர்கள் காவிரிக்கரையை அடைந்ததும், தன் கணவன் இருக்குமிடத்தில் பல்லக்கில் செல்வது அவருக்கு மரியாதை தருவதாக இருக்காது என எண்ணினாள் ஆண்டாள். எனவே, தன்னை ஆட்கொள்ளும்படி ரெங்கமன்னாரிடம் வேண்டினாள். ரெங்கமன்னாரும் அவளை தன்னுடன் வரவழைத்துக் கொண்டார். இதனிடையே, தன் மகளைக்காண பல்லக்கிற்குள் பார்த்தார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாள் அங்கில்லாததைக் கண்டு திகைப்படைந்தார். தன் மகளை ரெங்கமன்னார், அழைத்துக் கொண்டதை எண்ணிய அவர், தன் ஊரில் வைத்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். ரெங்கமன்னாரும் ஒப்புக்கொண்டார். அதன்படி பங்குனி உத்திரத்தன்று ஆண்டாளை, ரெங்கமன்னார் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதன் அடிப்படையில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் நடக்கிறது.

மகள் மீது பாசம் கொண்ட தந்தை பெரியாழ்வார், தான் வளர்த்த நந்தவனத்தில் குழந்தையாக கிடைத்த ஆண்டாள் மீது அதிக பாசம் கொண்டு வளர்த்தார். ஒரு தந்தை தன் மகள் மீது எவ்வாறு பாசம் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார் பெரியாழ்வார். ஆண்டாளை அவர் ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுக்க சென்றபோது, ஆண்டாள் சுவாமியுடன் சேர்ந்துவிட்டாள். அப்போது தன் மகளைக் காணாத அவர் ஆற்றாமை மிகுதியால், “”ஒருமகள் தன்னையுடையேன் உலகம்நிறைந்த புகழால் திருமகள் போலவளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டுபோனான்” என்று பாடினார்.தனது இல்லத்தில் மகாராணியாக வாழ்ந்தவள், தற்போது பெருமாளை மணம் முடிக்கின்றாளே! அவள் இங்கே இருந்தது போல சிறப்புடன் அங்கே வாழ்வாளா! என்று தந்தையின் மன பதைபதைப்புடன் இப்பாடலை பாடினார். ஆண்கள், இப்பாடலை பாடினால் தங்களது குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

பக்தர் பார்த்தபின்பே தரிசனம்:ஆண்டாள் கோயிலில் நடை திறக்கும் அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளை பார்ப்பதில்லை. கதவை திறந்ததும் ஆண்டாளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியை பார்க்கின்றனர். ஆண்டாள் முதலில் இந்த கண்ணாடியை பார்த்துக்கொள்வதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அர்ச்சகர்கள் இவ்வாறு செய்கின்றனர். பின்பு ஆண்டாளுக்கு தீபம் ஏற்றப்படுகிறது. பக்தர்கள் பார்ப்பதற்காக திரை விலக்கப்பட்ட பிறகே, அர்ச்சகர்களும் ஆண்டாளை பார்க்கின்றனர். ஆண்டாளுக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.முன்பு, ஆண்டாள் சன்னதி நடைதிறக்கும் போது ஒரு பசு கொண்டு வரப்படும். மகாலட்சுமி வாசம் செய்யும் பசுவின் பின்புறத்தில் ஆண்டாள் முதலில் விழிப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது. தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் இல்லை.

 – நன்றி விக்கிப்பீடியா….