ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும்.

வரலாறு

இறைவன் ஸ்ரீமன் நாராயணன் வராக அவதாரத்தின் போது காலநேமி என்று ஒரு அசுரனை வதம் செய்தபின் அவரது துணைவியர் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் பூமாதேவி தேவியருடன் ஒரு ஆலமரத்தின் கீழ் ஓய்வு எடுத்த இடம் செண்பகதோப்பு எனும் அழகிய வனம் ஆகும்.

இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி மற்றும் கண்டன் எனும் அரச குமாரர்கள் இவ்வனத்தில் வேட்டையாடும்போது கண்டணை புலி கொன்றுவிட, வில்லி கண்டணை தேடி களைத்து உறங்கியபோது இறைவன் கனவில் தோன்றி நடந்ததை கூறி அங்கு தனக்கு ஆலயம் எழுப்புமாறு பணித்தார். இறைவன் ஆணைப்படி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது. திருமலைநாயக்கர் மற்றும் இராணிமங்கம்மாள் தங்கள் ஆட்சிகாலத்தில் இவ்வூர் கோயில்களில் பல திருப்பணிகளை செய்துள்ளனர்.

ஆடிப்பூர தேரோட்ட உற்சவம்

18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும். பத்து கி.மீ தொலைவிலும் தேர் எந்த ரதவீதியில் உள்ளது என அறியலாம். தேரோட்ட உற்சவத்தில் வடம் பிடித்து மக்கள் இழுக்க, நின்ற தேர் நகர மறுத்தால் தேரின் பின் சக்கரங்களில் பெரிய கனமான மரத்தடியால் உந்தித் தள்ளுவர். எண்ணை தடவிய கனமான மர சறுக்குக்கட்டைகளால் தேரை நிறுத்தவும் பக்கவாட்டில் திருப்பவும் செய்வர்.

காலபோக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிக செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. மாற்று சிறிய தேர் பயன்பட்டது. மீண்டும் பெரிய தேரை சீரமைத்து இழுத்தபோது அலங்கார மேலடுக்கு சாரம்,கலசம் சரிந்து கீழே விழுந்து பல உயிர்பலி நேர்ந்தது.

முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிசட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே).

நன்றி விக்கிப்பீடியா….